பூமி மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. மனிதர்கள் அளவிற்கு பூமியை காயப்படுத்துவதும் யாரும் அல்ல. மனிதர்களுக்கான உயிர் ஆதாரத்தை வழங்கும் இயற்கையின் உயிரை மனிதன் ஈவிரக்கமின்றி பறித்து வருகிறான். தான் அழித்துக் கொண்டிருக்கும் விஷயங்கள், மிக விரைவிலயே தன்னை அழிக்க போகிறது என்ற உண்மையை மனித இனம் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் இயற்கை வளங்களின் அழிப்பு குறித்து மிக சில தமிழ் திரைப்படங்கள், சில இடங்களில் பதிவு செய்திருக்கின்றன.
பசுமை போர்த்திய வனங்களில், வாழ்வை தொடங்கி, வாழ்ந்து, முடிக்கும் மலை சார்ந்த மக்களின் வாழ்வை அதன் யதார்த்தங்களின் நெருக்கத்தில் பதிவு செய்தது பேராண்மை திரைப்படம். விஷங்களை விதைத்து வீணாக்கப்பட்ட நிலங்களின் கதை, அதிகார வர்க்கம் ஆட்டிப்படைக்கும் ஆளுமைக்கெதிரான சிவப்பு கம்யூனிச சித்தாந்தம், இந்திய காடுகளில் அந்நியர்களின் ஆதிக்கம் என பல தளங்களிலும் பயணித்த பேராண்மை, தமிழ் சினிமாவில் மலை இனம் மற்றும் வனம் குறித்த முக்கிய படைப்பாக கருதப்படுகிறது. கடந்த 2009ல் வெளியான பேராண்மை படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன். ஜெயம் ரவி, ஊர்வசி, பொன்வண்ணன் உட்பட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் வித்யாசாகர்.
இதற்கு அடுத்து வழக்கமான காதல் கதை தான் என்றாலும், வழக்கத்திற்கு மாறான களத்தில், வன அழிப்பு குறித்த சில முக்கிய பதிவுகளை செய்தது கும்கி திரைப்படம். ஏற்கனவே, தன் மைனா படத்தில் வனத்தை களமாகக் கொண்டிருந்த இயக்குநர் பிரபு சாலமன், கும்கியிலும் அந்தப் பாணியை தொடர்ந்திருந்தார். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மரங்களை, தங்களின் சுய லாபத்திற்காக வெட்டும் மக்கள் கொண்ட இதே சமூகத்தில், மரங்கள் வீழ்ந்தால், தாமே வீழ்ந்ததாக எண்ணி கண்ணீர் விடும் சில இயற்கை காதலர்களும் இருக்கவே செய்கின்றனர். கிராம வளர்ச்சி, சமூக சீர்திருத்தம் போன்ற பல விஷயங்களை பேசிய உன்னால் முடியும் தம்பி, மரங்கள் வெட்ட்ப்படுவதற்கு எதிராகவும் சில கருத்துக்களை பதிவு செய்தது.
நாயகனுக்கான அறிமுக காட்சிதான் என்றாலும், படத்தின் முதல் சில காட்சிகளில் இயற்கையின் அழகையும், அவை அழிக்கப்படுவதற்கு எதிரான விஷயங்களையும் காட்சிப்படுத்தியது சமீபத்தில் வெளியான சமர் திரைப்படம். தமிழ் சினிமாவில் பெரும்பாலும் காடுகள் தொடர்ந்து சில விஷயங்களிற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. திரில்லர் வகைப் படங்களுக்கான களமாக பெரும்பாலும் காடுகள் இடம்பெற்றிருக்கும். நாயகன் நாயகியை கடத்திக் கொண்டு போய் வைக்கும் இடமாக காடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவை அல்லாமல், வீரப்பனின் கதையை நேரடியாகவோ, மறைமுகவாகவோ சொன்ன படங்கள், மற்றும் இரணியன், சீவலப்பேரி பாண்டியன் போன்ற மனிதர்களின் வாழ்வை சொன்ன சில படங்களில் அவர்கள் மறைந்து வாழும் இடமாக காடுகள் இடம்பெற்றிருக்கும். கென்ய நாட்டைச் சேர்ந்தவர் வங்காரி மாத்தாய் என்பவர், தன் வாழ்நாள் முழுவதையுமே இயற்கை பாதுகாப்பிற்காகவும், வன அழிப்பிற்கு எதிராகவும் போராடியவர். கிரின் பெல்ட் மூவ்மெண்ட் என்ற திட்டத்தின் மூலம் கென்ய மகக்ளை ஒன்றிணைத்து காடுகளை பாதுகாத்தவர்.
2004யில் இயற்கை பாதுகாப்பிற்கான நோபல் பரிசை வென்றவர். பூமி என்ற சிறிய கோளில் சிறிய இடத்தில் இருக்கும் மக்கள் சிறுமை கொண்டு, காடுகளை அழிப்பது, இறுதியில் மனித இனத்தையே கூட அழித்துவிடும். 250 கோடி ஆண்டுகளிற்கு முன்பு பெர்மியன் காலத்தில் பூமி இப்படி அழிந்ததாக சொல்லப்படுகிறது. வானம் பாலைவனமாகிவிடாமல், பூமியில் பசுமை போய்விடாமல், சமுத்திரங்கள் வறண்டு விடாமல் இருக்க மக்கள் இயற்கையை பாதுகாப்பது அவசியமாகிறது. "சிறு துளி பெரு வெள்ளமாகிறது". அது போல் இன்று நாம் முயற்சிக்கும் சிறிய பாதுகாப்பு முயற்சிகள், நாளை பூமியை வளம் மிக்கதாக மாற்றும். இப்படியான கருத்தை மிக சில தமிழ் திரைபப்டங்கள் மட்டுமே பதிவு செய்திருப்பது வருத்தத்திற்குரிய விஷயம் தான்.
மனித வளர்ச்சிக்காக என்று சொல்லப்படும் பல கண்டுபிடிப்புகளும், மனித இனத்தை அழிக்க வல்லமை கொண்டதாகவே இருக்கின்றன. அதில் முக்கியமானது அணு உலைகள். பல நாடுகளில், பல உயிர்களை குடித்த அணு உலைகளுக்கு எதிராக இன்று பல குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. சர்வதேச அளவிலும் சில படைப்புகள் இது குறித்த பதிவுகளைச் செய்திருக்கின்றன.
ஹிரோஷிமா அணு குண்டு தாக்குதலின் போது நடந்த சம்பவம். பதிநான்கு வயது சிறுவன் அவன். குண்டு வெடிப்பில் அவன் சிக்கவில்லை. ஹிரோஷிமா துயரம் நடந்து முடிந்த 2வது நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 9 நாட்கள் கழித்து அவன் தலை மயிர் உதிர ஆரம்பித்தது. ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்தது. 17 வது நாள் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. 21வது நாள் அவன் இறந்து போனான். சாவிற்கு காரணம் அணு குண்டிலிருந்து வெளியேறிய அணுக்கதிர்களை அவன் சுவாசித்தது.குண்டில் மட்டுமல்ல அணு உலைகளில் இருந்து, அணுக் கதிர்கள் வெளியேறினாலும் சுவாசிப்போருக்கு இதே நிலை தான்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருக்கும் ஓர் அணு உலை. அங்கு யதேச்சையாக ஒருவித நடுக்கத்தை படம்பிடிக்கும் பத்திரிக்கையாளர். இது ஓர் பேரழிவிற்கான ஆரம்பம் என்பதை உணரும் அணு உலை பணியாளர் உண்மையை உலகிற்கு காட்ட முயற்சிக்கிறார். அரசியல் அவரை கொல்கிறது... அணு உலை அசம்பாவிதத்தை அரங்கேற்றுகிறது... இது தான் 1979யில் வெளியான ”தி சீனா சிண்ட்ரோம்” படத்தின் கதை. புனைக் கதையாக இருந்தாலும், படம் வெளியாகி 12 வது நாள் பென்சில்வேனியாவில் திரி மைல் ஐலேண்ட் அணு உலையில், அணு விபத்து நடந்தது.
படத்தில் காட்டப்பட்ட பல காட்சிகளிற்கும், அந்த சம்பவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்பட்டது. அணுக் கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டிய ஓர் அதிகாரி, பணத்தை மிச்சப்படுத்த ரயிலில் அதை அனுப்பி வைக்கிறார். ரயிலில் ஏற்பட்ட கோளாரால் ரயில் நிற்காமல் அதிவேகமாக செல்கிறது... பல கட்ட முயற்சிகளிற்குப் பிறகும், அணுக் கழிவுகள் ஓர் நகரத்தை அழிக்கிறது. 1999ல் வெளியான ”அடாமிக் டிரெயின்” என்ற படத்தின் கதை இது.
1966ல், 16,000 ஆயிரம் உயிர்களை பலி வாங்கிய செர்னோபில் அணு விபத்தை பின்னணியாகக் கொண்டு, த்ரில்லர் படமாக உருவாகியிருந்தது செர்னோபில் டைரிஸ் என்ற திரைப்படம். தம் மக்களின் உயிரைக் குடித்து, அவர்களுக்கான நலத்திட்டங்களை தர வேண்டிய அவசியமில்லை என்று கருதி பல்வேறு உலக நாடுகளும் அணு உலைகளுக்கெதிரான சட்டங்களை இயற்றியுள்ளன. செர்னோபில், ஃபுகுசிமா போன்ற விபத்துக்களை தங்கள் நாடும் சந்தித்துவிட கூடாது என்பது அந்த அரசுகளின் எண்ணம்.
இந்தியாவிலும் அணு உலைக்கெதிராக ஒரு கிராமமே ஒன்று திரண்டு, ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது. இந்திய அரசு அவர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளித்துள்ளது. இருந்தும், உயிரைக் காக்கும் அரசு மருத்துவமனைகளின் சுகாதாரமும், நோயாளிகளின் பாதுகாப்புமே கேள்விக்குறியாக இருக்கும் ஓர் நாட்டில், உயிரைக் கொல்லும் என்று சொல்லப்படும் அணு உலையின் பாதுகாப்பு எந்தளவிற்கு இருக்கும் என்பது எதிர்ப்பாளர்களின் கேள்வியாக இருக்கிறது. பதில் கிடைக்காத பல கேள்விகள் சுழன்றாலும், அணு உலை குறித்து சர்வதேச அளவில் பேசிய அனைத்து திரைப்படங்களுமே அணு உலைகளுக்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்துள்ளன.