புதுடில்லி: தற்போது உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் இந்தியா, வருங்காலத்தில் உலக நாடுகளுக்கு ஆயுத சப்ளை செய்ய வேண்டும் என்பதே தனது கனவு என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் இந்தியா டுடே ஏற்பாடு செய்திருந்த தலைவரின் உரை (தி லீடர்ஸ் ஸ்பீச்) நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் துவக்கமாக சிறந்த நிர்வாக கோட்பாடுகளின் அடிப்படையில் மாற்றம் என்ற பெயரில் குறும்படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் தான் பேச விரும்புவதை, இந்த குறும்படம் ஒரு அறிமுகமாக வழங்கியுள்ளதாக மோடி தெரிவித்தார். பின்னர் மோடி நிகழ்ச்சியில் பேசுகையில்,
* தலைமைப் பண்புக்கு என்று தனியாக மந்திரமோ தந்திரமோ கிடையாது. இது போன்ற பிதற்றல்களில் இருந்து நான் எப்போதுமே விலகியே இருப்பேன்.
* குஜராத் மாநிலம் தனது திறமைகளுக்காக பெருமைப்படுகிறது. குஜராத் பெருமைப்படும் போது இந்தியா ஏன் பெருமைப்படக்கூடாது?
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் என்ற பெயரை, வளர்ச்சி உத்தரவாத திட்டம் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு தயாரா? இதன் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்க்கலாம். இதுவே தலைமைப் பண்பு.
* நாடு ஏழ்மையின் அடிமைத்தலையிலிருந்து விடுபடவேண்டும்.
* குஜராத்தில் இரண்டு கால்வாய் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் துவக்கப்பட்டது. அது இன்னும் கட்டுமானப்பணியிலேயே உள்ளது. மற்றொன்று, விவசாயிகளின் துணையோடு நாங்கள் உருவாக்கியுள்ள சுஜலாம் சுபலாம் திட்டம். இத்திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
* அரசாங்கத்திற்கு தேவை சீரமைப்பு. அது சாதாரண மனிதனின் மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
* ஓட்டுகளை விற்றும் வாங்கியும் ஒப்பந்தமிடும் ஊழல் நிறைந்த ஜனநாயகமாக நமது ஜனநாயகம் உள்ளது.
* நான் குஜராத் விவசாயிகளிடம் கூறியதெல்லாம், உங்களுக்குத் தேவை தண்ணீர். மின்சாரம் அல்ல. நான் உங்களுக்கு தண்ணீர் அளிப்பேன். அதனால் மின்சாரத்திற்காக போராட வேண்டாம் என விவசாயிகளை நோக்கி கூறும் மன வலிமை எனக்கு இருந்தது.
* ஒரு சிலர் போன்று வரவேண்டும் என்ற கனவு எல்லாம் எனக்கு இல்லை. நான் ஒரு மாநிலத்தின் முதல்வராக ஆவேன் என்று கூட நினைத்துப்பார்த்ததில்லை. இதற்காக எந்த ஜோதிடரையும் சந்தித்து நான் முதல்வராக ஆவேனா என கேட்டதும் இல்லை. பெரும்பாலான மக்கள் ஒரு சிலர் போல் வரவேண்டும் என கனவு கண்டு அது முடியாமலேயே இறந்து விடுகின்றனர். அவர்களை பின்பற்ற எனக்கு விருப்பமில்லை.
* ஒரு கட்சி ஜனநாயக முறைப்படி செயல்பட்டு, அதன் முடிவுகள் ஜனநாயக ரீதியில் எடுக்கப்பட்டால் அதைப் பார்த்து மக்கள் சந்தோஷப்படுவார்கள். அதை விடுத்து ஒரு குடும்பத்தினர் எடுக்கும் முடிவுகளைக் கொண்டு ஒரு கட்சி செயல்படக்கூடாது.
* கடந்த 40 ஆண்டுகளில், குஜராத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. ஆனால் கடந்த 2001ம் ஆண்டு முதலான எனது ஆட்சிக்காலத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன.
* எனது அதிகாரிகளிடம் நான் கூறுவது எல்லாம், அரசியல்வாதிகளுக்கு பணியாற்றுவது உங்கள் வேலை அல்ல. சாதாரண மக்களுக்காக உழையுங்கள் என்பதே.
* இந்த நாட்டிற்கு சட்டங்களை விட செயல்களே அதிகமாக தேவைப்படுகிறது.
* உங்களது மனக்குறைகளை மாற்றியமைக்கின்ற நடைமுறை மோசமாக இருந்தால், உங்களது ஜனநாயகம் மோசமாக இருக்கிறது என்று அர்த்தம்.
* நாங்கள் எங்களது மக்களுக்கு உரிமைகளைக் கொடுத்துள்ளோம். இன்றைய நிலையில், மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் மனிதன் கூட அரசு அதிகாரிகளை மிரட்ட முடிகிறது. இதற்கு காரணம் அவர்களுக்குள்ள அதிகாரம் தான்.
* நாட்டின் திட்டங்கள் செயல்வடிவம் பெற வேண்டும்.
* தலைவர்களை மையப்படுத்திய, தனி நபர்களை மையப்படுத்திய செயல்கள், சிறிது காலத்திற்கு மட்டுமே செயல்படும்.
* குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்த போது அங்கு 3 மாத காலம் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தன. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று நடக்கவில்லை.
* மக்கள் தொகை மற்றும் ஜனநாயகம். இந்த இரண்டு காரணிகளே, இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டாக உறுதி செய்பவையாக உள்ளன.
* கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக, பிரதமரை சந்தித்த போது அவரிடம் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற சீரமைப்பு திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவது குறித்து விவாதித்தேன். அவரும் மிகவும் ஆர்வமாக இதுகுறித்து அறிக்கை ஒன்றை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்குப்பின் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
* ரயில்வே பட்ஜெட் போடுவதற்கு முன்பாக, அதுகுறித்து விவாதிப்பதற்காக எந்த வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. அரசியல்வாதிகள் துறைமுகங்களுக்கு ரயில் பாதைகளை போடுவதை விட, தங்களது சொந்த தொகுதிகளுக்கு ரயில்பாதைகளைப் போடுவதிலேயே குறியாக இருக்கின்றனர்.
* ஒரு விமான நிலையம் உருவாக்கப்பட்டால், அதில் தனியார் விமான நிறுவனங்கள் இயங்க அனுமதிப்பதில்லையா? அது போலவே ரயில்வே திட்டங்களைப் பொறுத்த வரையில், ரயில் தண்டவாளங்கள் அரசு வசம் வைத்துக்கொண்டு அது தனியார் ரயில்களை இயக்க அனுமதிக்கலாமே?
* எனது திட்டங்கள் செயல்படுத்தப்படும் பட்சத்தில், நூறு கோடி இந்தியர்களின் வருமானம் உயரும். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இந்த ஆலோசனைகளுக்காக எனக்கு கட்டணம் கூட நீங்கள் கொடுக்க வேண்டாம்.
* இந்தியாவிலேயே தனியார் ரயில்வே செயல்படும் ஒரே மாநிலம் குஜராத் தான்.
* சுற்றுச்சூழலுக்கு ஆதரவான வளர்ச்சியே எனது குறிக்கோள். சூரிய ஒளி அபரிமிதமாக உள்ள இந்தியா, எண்ணெய் உற்பத்தி நாடுகளின் சர்வாதிகாரப் போக்கிலிருந்து உலக நாடுகளை விடுபடுவதற்காக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
* எனது வாழ்க்கை தத்துவம்: நமது வாழ்வில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி சிந்திக்காமல், தற்போது நடப்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பதே.
* சில முதல்வர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்ளும் விஷயம், தங்களது அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த கவலையே. அதற்கு நான் அளிக்கும் பதில், திறமையை மட்டும் அடிப்படையாக கொண்டு முடிவெடுங்கள் என்பதே.
* தேர்தல் நிதி வசூலிப்பது பிரச்னையல்ல. அதை தொழிலதிபர்களிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் வைத்துக்கொண்டால் பிரச்னை தான். அதற்கு பதிலாக, நிதி வசூலைப் பெருக்க வீதியில் இறங்குங்கள். உங்களுக்கு நிதியுடன் சில ஓட்டுக்களும் கிடைக்கும்.
* குஜராத் மாநிலத்தில் வறுமை என்பது, அண்டை மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வருவதால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து மீளும் முயற்சி இந்திய அளவில் 8 சதவீதமாக இருக்கும் அதே வேளையில் குஜராத் மாநிலத்தில் இதன் அளவு 33 சதவீதம்.
* நாட்டிலேயே குஜராத் அதிகளவிலான தொழில் வளர்ச்சியை கொண்டுள்ளது. ஆனால் டில்லி, மகாராஷ்டிரா மற்றம் சில சிறிய மாநிலங்களுக்குப்பின் குஜராத் இருப்பது போன்ற அறிக்கைகள் எப்படி வெளியாகின்றன என்பது எனக்கு ஆச்சர்யமளிக்கிறது.
* உலகில் ராணுவ அதிகாரம், பொருளாதார அதிகாரங்கள் எல்லாம் முடிந்து விட்டன. தற்போதைய நூற்றாண்டு அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. வரலாற்று காலத்தில் இருந்தே இந்தியா அறிவில் முன்னோடி நாடாக இருந்து வருகிறது.
* பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் நாம் நல்ல உறவை மேம்படுத்த வேண்டும். அதே வேளையில் நாட்டின் நலன் என்பது ஒப்புயர்வற்றதாக இருக்க வேண்டும். எனது கனவெல்லாம் இந்தியா உலக நாடுகளுக்கெல்லாம் ஆயுத சப்ளை செய்யும் அளவிற்கு வல்லமை பெற வேண்டும் என்பதே.
* கடந்த சில ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் மற்றும் இரண்டாவது அரசுகள், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தையே சிதைத்து விட்டன.
* நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு தேவை. அதுவே மதச்சார்பின்மை.
* நாட்டிலுள்ள அரசாங்கங்கள் வர்த்தகம் செய்யவதையே தொழிலாக கொண்டிருக்கக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்கே அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஓட்டல்கள் கட்டுவதை விட மருத்துவமனைகளை கட்டுவதே அவசியம். இவ்வாறு மோடி பேசினார்.