பொறுப்பற்ற பயணிகளால் பொலிவிழக்கும் இயற்கை….
மாசுப்பட்டு கிடக்கும் சுற்றுலா தலங்கள் 
 
கோடை சீசன் உச்சத்தில் இருக்கும் நிலையில், சுற்றுலாத் தலங்களின் நிலை எப்படி இருக்கிறது ?
பொறுப்பற்ற பயணிகளால் பொலிவிழக்கும் இயற்கை வளத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதை படம்பிடித்திருக்கிறது புதிய தலைமுறை....
குப்பை மேடாகும் உதகை
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடையில் பள்ளி, கல்லூரிகளின் விடுமுறைக்காலத்தை கொண்டாடி களிக்க எங்கே செல்ல விரும்புவீர்கள் என்று கேட்டால், பெரும்பாலானோரின் முதல் தேர்வு உதகமண்டலமாகத்தான் இருக்கும். அப்படிபட்ட, இயற்கை எழில் கொஞ்சும் இந்த கோடை வாசஸ்தலத்தில் சீசன் உச்சத்தில் இருக்கிறது.. இந்த சீசனே, உதகையின் அழகுக்கு எதிரியாக மாறியிருக்கிறது.
'மலைகளின் அரசி' என வர்ணிக்கப்படுகிறது உதகை.
கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டப்பெட்டா சிகரம், சுமார் 65 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரி என எங்கெங்கும் உதகையில் கொட்டிக் கிடக்கிறது இயற்கை அழகு.
3 ஆயிரம் விதமான தாவர இனங்கள் அடங்கிய தாவரவியல் பூங்கா, ஏரியை ஒட்டியுள்ள மான் பூங்கா என பார்க்கும் இடமெல்லாம் பசுமை போர்த்தியுள்ள இந்த உதகைதான், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குப்பை மேடாக மாறி வருகிறது. சுற்றுலா வரும் பயணிகள் வீசி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் போன்றவை நாளுக்கு நாள் உதகையின் அழகை சீர்குலைத்து வருகின்றன.
இயற்கை எழிலை பாதுகாக்கவும், சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால், சுற்றுலா வரும் பயணிகள் தங்களது மகிழ்ச்சிக்காக சுற்றுச்சூழலையே மாசுப்படுத்திவிட்டு செல்வதாக அரசு அதிகாரிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
உதகையில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை செய்துக் கொடுத்துள்ளது சுற்றுலா வளர்ச்சிக் கழகம். இதனை பயன்படுத்தி மகிழும் சுற்றுலாப்பயணிகள், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்க வேண்டாம் என்று வனத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
சுற்றுலாத் தலங்களில் நீர்வீழ்ச்சியுடன் கூடிய பொழுதுப்போக்கு இடங்களுக்கு எப்போதுமே கூடுதல் மவுசு உண்டு. அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளை அதிக கவர்ந்த ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியும், சுகாதார சீர்கேட்டுக்கு தப்பவில்லை.
மருத்துவ குணமிக்க மூலிகைகளை தொட்டுத் தடவி வரும் அருவி..,. எந்த நேரத்திலும் குளிர்ச்சி மாறாமல் கொட்டும் நீர்வீழ்ச்சி... இத்தனை அழகுமிக்க ஒகேனக்கல்லுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் இந்த தலம், நாளுக்கு நாள் தனது பொலிவையும், அழகையும் இழந்துக் கொண்டிருக்கிறது. அருவிக்கரையில் ஈமக் கிரியை சடங்குகள் செய்வது, பிளாஸ்டிக் பொருட்கள், துணிமணிகள் போன்றவற்றை வீசி எறிவது போன்ற பழக்கங்களால் கொட்டும் அருவியில் தற்போது அதிகமாக கொட்டிக்கிடக்கிறது குப்பைக் கூளங்கள்.
சுற்றுலா வரும் பலர் அருவிக்கரையில் அமர்ந்து மது அருந்திவிட்டு குப்பைகளை அருவியில் வீசிச்செல்வது வாடிக்கையாக இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. நீண்டநாளாக அகற்றப்படாமல் கிடக்கும் இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், ஒகேனக்கல் வரும் பயணிகளின் இன்பச் சுற்றுலா, துன்பச் சுற்றுலாவாக மாறி வருவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மட்டுமின்றி தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்க அரசு நிர்வாகமும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பாதுகாப்பற்ற கொடைக்கானல் படகு சவாரி
கோடைக்காலத்தை குளுமையாக கழிக்க விரும்புகிறவர்கள் கொடைக்கானலை தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கு அண்மைக்காலங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. அத்தனை பயணிகளும் ஆர்வம் காட்டும் விஷயம் படகு சவாரி. அந்த படகு சவாரி எப்படி இருக்கிறது ?
கொடைக்கானலின் தனித்துவமான இயற்கை அழகு எண்ணற்ற சுற்றுலாப்பயணிகளை நாள்தோறும் ஈர்த்துவருகிறது. குறிப்பாக கோடை சீசன் காலமான தற்போது கொடைக்கானலில் எங்கு பார்த்தாலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம்தான் தெரிகிறது. கொடைக்கானல் ஏரி, பிரயண்ட் பூங்கா, குணா குகை உள்ளிட்ட பல இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.. கொடைக்கானல் ஏரியைப் பொறுத்தவரை சில பேர் பாதுகாப்பு கவசத்தை அணிந்து கொண்டும் , சில பேர் அதை அணிந்து கொள்ளாமலும் செல்கின்றனர்.
கொடைக்கானலின் பிரசித்தி பெற்ற கோடை விழாவை முன்னிட்டு பல சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வரும் நிலையில் கவசம் இல்லாமல் படகு சவாரி செய்வதன் அபாயத்தை உணராமல் அதிக அளவு பயணிகள் படகில் பயணப்படுகிறார்கள். இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
கொடைக்கானலின் அழகிய மலைப்பாதைகளில் வரிசை கட்டும் வாகனங்களும் எங்கிங்கெணாதபடி காட்சியளிக்கும் சுற்றுலாப்பயணிகளும் சீசன் கொண்டாட்டத்தை அறிவித்துக்கொண்டிருக்கின்றன.. இந்த சூழலில் சுற்றுலா பயணிகளும் உரிய ஒத்துழைப்பு தந்தால் தான் சுற்றுலா பயணம் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் இருக்கும் என்கிறது மாவட்ட நிர்வாகம்.
அவல நிலையில் ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது ஏற்காடு. எளிய மக்களுக்கும் சுற்றுலாவின் மகிழ்ச்சியை தரும் இந்த சுற்றுலாத்தலம் காலப்போக்கில் தனது அழகையும் தனித்தன்மையும் இழந்து வருகிறது. மரங்களும் பிற இயற்கை வளங்களும் அழிக்கப்படுவதால், வெப்பம் அதிகரித்து வரும் இந்தத் தலத்தின் இன்றைய நிலை எப்படியிருக்கிறது ?
இலைகளை உதிர்த்துவிட்டு, வெறும் கிளைகளை மட்டும் கொண்டிருக்கும் இந்த மரங்கள் இருப்பது ஏதோ வறண்ட பூமியில் அல்ல. ஒரு காலத்தில் பச்சைப் பசேலென மரங்கள் சூழ்ந்திருந்த சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காட்டுக்குச் செல்லும் வழிதான் இது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அரசன் என்ற பெயரைத் புதிதாக ஏற்றிருக்கும் இந்த மலை, அதற்கான பெருமையை வெறும் பெயர்ப்பலகை அளவில்தான் தாங்கி நிற்கிறது என்று கவலை தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
கோடை காலத்தில் மட்டும், லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் ஏற்காட்டில், போதுமான கழிப்பிட வசதிகளோ, பிற அடிப்படைச் சுகாதார வசதிகளோ இல்லை. இதனால், குப்பை மேடுகள் உருவாகி, அவை பன்றிகளின் சரணாலயங்களாக மாறிவிட்டன.
படகு சவாரிக்குப் பெயர்பெற்ற ஏற்காடு ஏரியும் பராமரிப்பின்றிக் கிடக்கிறது. இந்த ஏரியில் ஆகாயத் தாமரைகள் படர்ந்து, சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்த அவல நிலையில் இருந்து மீண்டு, பழைய பொலிவைப் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.
கன்னியாகுமரியில் அவதிப்படும் சுற்றுலா பயணிகள்
தென்னிந்தியாவின் முனைப்பகுதியில் முக்கடல் சங்கமிக்கும் அழகான சுற்றுலாத் தலம் கன்னியாகுமரி. சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற இந்த தலத்தில் பயணிகளுக்கான வசதிகள் கேள்விக்குறியாகவே இருக்கின்றன.
மூன்று கடலின் சங்கமத்தோடு சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண கன்னியாகுமரியில் எந்த நேரமும் கூட்டம் இருக்கும். படகு சவாரியும் விவேகானந்தர் பாறையும், அண்மைக்காலமாக திருவள்ளுவர் சிலையும் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் பெரும்பாலும் விடுமுறைக்காலங்களில் களைகட்டி இருக்கும். குறிப்பாக கோடை சீசனில் அதிக அளவு பயணிகள் வரும் சூழலில், அவர்களுக்கான வசதிகள் குறைவாகவே இருக்கின்றன.. இதை எடுத்துக்காட்டும் விதமாக பூட்டியே இருக்கும் உடை மாற்றும் அறை, திறக்கப்படாமல் இருக்கும் கழிப்பறை என சரியான அடிப்படை வசதிகள் இல்லாததால் கடலில் குளிப்பதைச் சுற்றுலா பயணிகள் தவிர்க்கின்றனர்.
இது போதாதென்று பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே இறைந்து கிடப்பதாலும், கடற்கரை எங்கும் பிளாஸ்டிக் குப்பைகளும், கழிவுகளுமாக சிதறிக் கிடப்பது சர்வ சாதாரணமாக இருக்கிறது.. மேடும் பள்ளமுமாக கடலுக்குச் நீராடச் செல்லும் பாதை செப்பனிடப் படாமல் இருக்கிறது.
காலம் காலமாக கன்னியாகுமரி கடல் பகுதி பெரும் வரவேற்பு பெற்றுவரும் சுற்றுலா தலமாக இருக்கும் நிலையில், பயணிகளுக்கான வசதிகள், சுற்றுலா பகுதிகளின் மோசமான பராமரிப்பு போன்றவை குறித்து விளக்கம் கேட்க மாவட்ட நிர்வாகத்தை அணுக முயன்றபோது சரியான பதில் கிடைக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா துறை அதிகாரிகளும் சரியான விளக்கத்தை தர மறுத்துவிட்டனர்.