பணம் தரும் பாக்கு மட்டை!

Give money Betel-but

தொன்னையிலோ, மந்தாரை இலையிலோ உணவு கொடுத்தால், ஒரு தினுசாக பார்ப்பார்கள் அந்தக் காலத்தில். கோயில் தவிர வேறிடங்களில்  அவற்றுக்கு மதிப்பில்லை. தொன்னை மற்றும் மந்தாரை இலைத் தட்டுகளின் நவீன வடிவமே இன்றைய பாக்கு மட்டை தட்டுகளும் கோப்பைகளும்.  வி.ஐ.பி. வீட்டு விசேஷங்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை இன்று பாக்கு மட்டைத் தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு! 

சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, மலிவானது, சுத்தம் செய்யத் தேவையின்றி, உபயோகித்ததும் தூக்கி எறியக் கூடியது என பாக்கு மட்டைத் தயாரிப்புகளின்  சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். பாக்குமட்டைத் தயாரிப்புகளில் தமிழகத்தில் நம்பர் 1 மேனகா ஸ்ரீபதி! குறைந்த உழைப்பில் நிறைய  வருமானம் பார்க்க விரும்பும் பெண்களுக்குப் பொருத்தமான தொழில் இது என்கிறார் அவர்.

‘‘எம்.காம். பட்டதாரியான நான், ஏதாவது பிசினஸ் பண்ணணுங்கிற தேடல்ல இருந்தப்ப, பாக்கு மட்டை தயாரிப்பு பத்திக் கேள்விப்பட்டேன். அந்த  நேரம் சென்னைல அந்தத் தொழிலுக்கு வரவேற்பு இல்லை. ஆனாலும், அதுல ஜெயிக்க முடியும்கிற நம்பிக்கைல துணிஞ்சு பயிற்சி எடுத்துக்கிட்டு,  பிசினஸ் தொடங்கினேன். முதல் 6 மாசம் பிசினஸ் இல்லை. ‘தப்பான முடிவு’ன்னு விமர்சனம் பண்ணாதவங்களே இல்லை. 

அதுக்கான காரணங்களை அலசினப்ப, மக்கள் மத்தியில நிறைய தவறான அபிப்ராயங்கள் இருக்கிறது தெரிய வந்தது. நிறைய தண்ணீர் வேணும், இட  வசதி வேணும், பெரிய ஃபேக்டரி வேணும்கிற மாதிரியான தப்பான நம்பிக்கைகளைப் போக்க நிறைய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினேன்.  பிளாஸ்டிக் ஆபத்துலேருந்து, பூமியைக் காப்பாத்தற முயற்சிகள்ல, பாக்கு மட்டைப் பொருள்கள் உபயோகத்துக்கும் பெரிய பங்குண்டு’’ என்கிற மேனகா,  இந்தியாவின் டாப் 10 பாக்கு மட்டை பொருள் தயாரிப்பாளர்களில் ஒருவர்!

பாக்கு மட்டைத் தயாரிப்புகளின் சிறப்புகள்

*  மரங்களில் இருந்து இயற்கையாக விழும் மட்டைகளைச் சேகரித்து, அழுக்கு, தூசி நீங்க சுத்தப்படுத்திய பிறகே பொருள் தயாரிப்புக்கு  அனுப்பப்படுகிறது. சுத்தப்படுத்துவதிலோ, தயாரிப்பிலோ எந்த ரசாயனக் கலவையும் சேர்க்கப் படுவதில்லை என்பதால், 100 சதவிகிதம்  இயற்கையானது.

*  எக்காரணம் கொண்டும், மட்டைகள் மரங்களில் இருந்து வெட்டப்படுவதில்லை. தானாக விழுகிற மட்டைகளைத்தான் உபயோகத்துக்கு எடுத்துக்  கொள்கிறார்கள். அதனால், மரங்களின் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுவதில்லை.

*  கீழே விழுந்த மட்டையானது, அடிப்பகுதியில் பச்சையாகவும், மேல் பகுதியில் பழுப்பு நிறத்திலும் இருக்கும். வெயிலில் காய வைத்த பிறகு, மறுபடி  நிறம் மாறும். அப்படி உலர்ந்த மட்டையை மறுபடி தண்ணீரில் நனைப்பார்கள். அப்போது அது விரியும். அது பாதி காய்ந்ததும், மெஷினில்  செலுத்தப்படும். மட்டைக்கு மட்டை நிறம் லேசாக வேறுபடலாம். அது அதன் இயற்கையான நிறம் என்பதால், அந்த நிற வேறுபாட்டைப் பார்த்து  பயப்படத் தேவையில்லை.

*  அதிகக் குளிர்ச்சி, அதீத சூடு என இரண்டையும் தாங்கக் கூடியது பாக்கு மட்டைப் பொருள்கள். ஃப்ரிட்ஜில் வைப்பதாலோ, சுடச்சுடப் பொருள்களை  வைப்பதாலோ, பாக்குமரத் தட்டோ, கிண்ணமோ எந்த எதிர்வினையையும் ஏற்படுத்துவதில்லை.

இது இப்படித்தான்!

மூலப் பொருள்கள்பாக்கு மட்டை, மேனுவல் அல்லது ஹைட்ராலிக் மெஷின், தண்ணீர்.

எங்கே வாங்கலாம்?

முன்பு தமிழகத்தின் சில இடங்களில் மட்டுமே கிடைத்த பாக்கு மட்டை, இப்போது கேரளா, கர்நாடகா, அந்தமான் எனப் பரவலாகக் கிடைக்கிறது.  தமிழகத்தில் கிடைப்பது நீளம் குறைவாகவும், அகலம் அதிகமாகவும் இருக்கும். கர்நாடகாவில் நீளம் அதிகம், அகலம் குறைவு. கேரளத்தில் எல்லாம்  கலந்து கிடைக்கும். அந்தமானில் ஆளுயர அளவுகளில் கிடைக்கும். ஏற்றுமதித் தரத்துக்கு ஏற்றது. தோப்புகளில் சொல்லி வைத்து வாங்கலாம். ஒரு  மரத்திலிருந்து ஒரு வருடத்துக்கு 5, 6 மட்டைகள்தான் விழும். ஈர நைப்புடன் இருக்கும் அவற்றை, விவசாயிகள் எடுத்துக் கழுவிக் காய வைத்து,  குடோனில் பாதுகாத்து, பிறகே நமக்கு சப்ளை செய்வார்கள். இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம் என்பதால், ஏற்கனவே இத்
தொழிலில் இருப்பவர்கள் மூலம் மட்டைகளையும் மெஷினையும் வாங்குவது மலிவு.

முதலீடு

ஒரு மட்டையின் விலை ரூ.2.50. ஒரு மட்டையில் குறைந்தது 3 தட்டுகள் செய்யலாம். மேனுவல் மெஷினின் விலை ஒன்றே கால் லட்சம்.  ஹைட்ராலிக் மெஷின் மூன்றரை லட்சம் ரூபாய். 

இட வசதி?

மேனுவல் மெஷின் போட 10க்கு 10 இடமும், ஹைட்ராலிக் என்றால் 10க்கு 15 அளவுள்ள இடமும் போதும். மற்றபடி மட்டை உள்ளிட்ட மூலப்பொருள்களை மொட்டை மாடி, கார் ஷெட், தோட்டம் போன்ற இடங்களில் போட்டு வைக்கலாம். தண்ணீர் டேங்க் ஒன்று தேவை.

என்னென்ன பொருள்கள்..?

12, 10, 8, 6, 4 இன்ச் என ஐந்து அளவுகளில் தட்டுகள் பண்ணலாம். வட்டம், சதுரம், அறுகோணம் என எந்த வடிவத்திலும் பண்ணலாம். தவிர சூப்  பவுல்கள், ஸ்பூன்கள், செருப்புகள், விசிறி, தொப்பி என நிறைய...

வருமானம்?

மேனுவல் மெஷினில் ஒரு ஷிஃப்டில், அதாவது 7 மணி நேரத்தில் 1000 தட்டுகள் பண்ணலாம். ஹைட்ராலிக் என்றால் 2 ஆயிரம் தட்டுகள். அவரவர்  வசதி, நேரத்தைப் பொறுத்து, 3 ஷிஃப்டுகள் வரை உழைக்கலாம். அதற்கேற்ப உற்பத்தியும் மாறும்.12 இன்ச் தட்டு ரூ.2.80, 10 இன்ச் ரூ.1.90, 8 இன்ச் ரூ.1, 6 இன்ச் 75 பைசா, 4 இன்ச் 30 பைசா, பவுல் மற்றும் சூப் செட் ஒன்று ரூ.6.50. இது  நமக்கான அடக்க விலை. இவற்றை முறையே 3.50, 2.50, 1.50, 1, 50 பைசா மற்றும் 7 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கலாம்.

மார்க்கெட்டிங்?

வட இந்தியாவில் இவற்றுக்கான மவுசு அதிகம். தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்கள், திருமண கான்டிராக்டர்களிடம் ஆர்டர் பிடிக்கலாம். சுற்றுலா  மையங்களில் உள்ள கடைகளில் விற்பனையாகும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

பயிற்சி?

ஒரு நாள் தியரி, ஒரு நாள் செய்முறை விளக்கம் என 2 நாள் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.2,500. இதில் வங்கிக்கடன் பெறுவது முதல் மார்க்கெட்டிங்  உத்திகள், மெஷின் வாங்குவது, பராமரிப்பது என சகலத்தையும் பற்றிக் கற்பிக்கப்படும்.